இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது.
கொரோனாவுக்கு எதிராக கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் இந்திய அரசின் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கிய நிலையில் இந்த 9 மாதங்களில் இந்தியா முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நூறு கோடி தடுப்பூசிகளில் 75 சதவிகிதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 25 சதவிகிதம் பேர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
நூறு கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள். கொரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
























