கார் விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார். அதனை அடுத்து அவரது ஓய்வு இல்லமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இந்த கொள்ளை முயற்சியின் போது காவல் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கேரளத்தைச் சேர்ந்த சயன், சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றச்சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது மரணம் பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. இது விபத்தா அல்லது விபத்து போல் மேற்கொள்ளப்பட்ட கொலையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் இம்மரணம் குறித்த மேல் விசாரணை தொடங்கவிருக்கிறது.
























