விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமையுண்டு, ஆனால் சாலைகளை மறிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பல மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள் மற்றும் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அதனால் போக்குவரத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகனங்கள் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் சில இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் சாலைகளில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின்போது ‘‘விவசாயிகள் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல, மக்களுக்கு சாலைகளில் செல்லவும் உரிமை உண்டு. எனவே சாலைகளை மறிக்க கூடாது என உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், விவசாய சங்கங்கள் இதுபற்றி பதில் அளிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றம் அந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
























