இந்தியாவின் தலைநகர் டெல்லியில் டெங்கு பாதிப்புகள் பெருமளவு அதிகரித்துள்ளன. மருத்துவமனைகள் நிரம்பியதால் நோயாளிகள் தரையில் இருந்தபடி சிகிச்சை பெறக் கூடிய அவல நிலை அங்கே ஏற்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் இப்போதுதான் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் பருவமழை காலத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் மொத்த டெங்கு பாதிப்புகள் 723 பேருக்கு கூடுதலாக பதிவாகி இருக்கிறது.
அதில் இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 382 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு ஆளான ஒருவர் முதன்முறையாக கடந்த 18ந்தேதி பலியானார். அதையடுத்து, சுகாதார பணிகளை தீவிரப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள் என பலரது வருகையால் வார்டு எண் 13 நிரம்பியுள்ளது.
அதனால் நோயாளிகள், தரையில் இருந்தபடியும் மருத்துவமனை வாசல் பகுதியில் இருந்தபடியும், சிகிச்சை பெறக் கூடிய அவலச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
























