பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து வழங்கவேண்டும் என்றும் வகுப்புகளை காணொளி காட்சி மூலம் வழங்குவதில் இருந்து விலக்கி நேரடியாக வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் என இரு வழிகளிலும் வகுப்புகளை நடத்தலாம் எனத் தெரிவித்தனர்.

உடல்நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க உரிய வாய்ப்பு தரவேண்டும் என்றும், மேலும் எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்பதை முன்கூட்டியே அறிவித்து விதிகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் எனவும் கொரோனா 3-ம் அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வருவதால் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையையும் அந்த உத்தரவில் நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.
























