கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்து உள்ளது.
அவர்களில் 22 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் புதைந்தும் போயுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்த போராடி கொண்டிருக்கும் வேளையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என அடுத்தடுத்த பாதிப்புகள் கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளன.
கேரளா, கடலோர பகுதிகளையும், மலை பகுதிகளையும் அதிகம் கொண்ட மாநிலம் என்பதால் மழையின் தீவிரம் குறைந்தபாடில்லை. கனமழையில் வாகனங்கள் மட்டுமின்றி, மக்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், கேரளாவில் முண்டகாயம் பகுதியில், கரையோரம் இருந்த முழு வீடு அப்படியே ஆற்றில் சரிந்து விழும் காட்சி வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது. மூணாறு பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் அரசு பேருந்து சிக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை அதிகம் கொண்ட இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல அப்பாவி உயிர்கள் பறிபோகின.
கோட்டயம் மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், மழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டன.
ஆலப்புழா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில், இடிப்பாடுகளுக்குள் சிக்கி கொண்ட 22 நாளே ஆன கைக்குழந்தை உட்பட ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், இந்திய கடற்படை உள்ளிட்ட மத்திய அரசின் முகமைகளின் ஊழியர்களும், கேரள அரசு ஊழியர்களுடன் தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
























