ஒருபுறம் பெரியவர்கள் செல்போனுக்கு அடிமையாகிவருவதைப்போல், சிறுவர், சிறுமியர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்தவண்ணம் உள்ளது. பெரியவர்களுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அதில் மூழ்கி எல்லா விஷயங்களையும் அவர்கள் தெரிந்துகொள்கின்றனர். ஆனால், சில நேரம் இந்த அதீதப் பயன்பாடு அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடுவதுண்டு. அப்படித் தான் கேரளாவில் ஒரு சிறுமி செல்போனால் மரணித்துள்ளார்.
கேரள மாநிலம் திரிச்சூரிலுள்ள பட்டிப்பரம்பு எனும் பகுதியில் வசித்துவருபவர் அசோக்குமார். இவர் அப்பகுதியின் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றியவர். இவரது மனைவி கூட்டுறவு வங்கியின் இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். இவர்களின் மகளான ஆதித்யாஸ்ரீ 3ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில், நேற்றைய தினம் சுமார் 10.30 மணியளவில் ஆதித்யாஸ்ரீ செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த சமயம் திடீரென செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி போலீசார் இதுகுரித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
அதிகப்பயன்பாட்டின் காரணமாக செல்போன் சூடாகி வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், விசாரணையின் முடிவிலேயே எதுவாயினும் தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவதன் பாதகங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தருவதுடன், சிறுவயதிலேயே செல்போனைக் கொடுத்து பழக்கவேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


























