தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தின் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 8 மணி நேரத்திற்கு மாற்றாக 12 மணிநேரம் பணியாளர்கள் வேலை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தாக்கல் செய்தார். இதற்கு தமிழக தொழிலாளிகள் உட்பட திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தொடர் எதிர்ப்புகள் இந்தச் சட்டமசோதாவுக்கு எதிராக எழுந்துவந்த நிலையில், 12 மணிநேர வேலைநேர மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதற்கு பலதரப்பினரும் வரவேற்பளித்தனர்.
இந்நிலையில், மசோதா தாக்கல் செய்யப்பட்ட சமயம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், திரும்பப் பெறப்பட்டதை மட்டும் ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து அவர், ’’தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் நுழையும் சமயம் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்தே தனது பிரச்சாரத்தை முன்வைத்துவந்த கமல்ஹாசன், தற்சமயம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கம் காட்டிவருகிறார். அதன் காரணமாகவே மக்களின் வெறுப்பைப் பெறும் அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருவதாக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி திமுகவை வைத்து சீட் வாங்கி வரும் தேர்தல்கலில் மநீம வெற்றிபெறத் திட்டமிட்டிருப்பதாலும் கமல்ஹாசன் மௌனம் காக்கிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.


























