செல்பி மோகத்தால் தலைகால் புரியாமல் அலைவோரின் கொட்டத்தை அடக்க, இத்தாலியின் பிரபல சுற்றுலாத் தலம் ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இங்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நின்று செல்பி எடுத்துக்கொள்வோருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது.
இத்தாலியில் உள்ள அழகிய மீன்பிடி கிராமமான போர்டோபினோவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் உச்சத்தில் இருக்கும் கோடை காலத்தை முன்னிட்டு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன, இந்தக் கடற்கரை நகரமானது அதன் வண்ணமயமான கட்டிடங்கள் மற்றும் அழகிய புகைப்படமெடுக்கும் படியான துறைமுகத்திற்காக புகழ் பெற்றது.
இந்த அழகே இப்பகுதிக்கு புதிய பிரச்சினையை உருவாக்கியுள்ளது. அதாவது இங்குள்ள காட்சிகளௌக்காக சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க முனையும் வேளையில் பின்னால் வருபவர்கள் நகரமுடியாமல் போய் வழியில் நெரிசல் ஏற்படுகிறதாம். ஆக இதைத் தடுக்க இங்கு பொறுப்பற்ற விதத்தில் செல்பி எடுப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போர்டோஃபினோ பகுதியின் மேயர் மேட்டியோ வியாகாவா, பொதுமக்கள் அதிகம் கூடும் நேரங்களில் செல்பி எடுக்க நெரிசலான நடைபாதைகளில் சுற்றுலாப் பயணிகள் முற்படுவதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளோரைக் கட்டுப்படுத்த, Instagram மூலம் பிரபலமான, பொதுமக்கள் அதிகம் கூடும் போர்டோபினோ மற்றும் மற்றுமொரு பிரபல சுற்றுலாத் தலத்தில் புகைப்படம் எடுத்தால் ரூ.24,800 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பொதுமக்கள் காத்திருக்கக் கூடாத சிவப்பு மண்டலங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த அபராதம் பண்டிகைக் காலமான ஈஸ்டரின் வார இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தினமும் காலை முதல் மாலை 6 மணி வரை இந்தக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் காலமான அக்டோபர் 15 வரை இந்த விதிகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேயர் வியாகாவா மேலும் கூறுகையில், ’’இந்தக் கட்டுப்பாடு இப்பகுதியை தனித்துக் காட்டுவதற்காக அல்ல; மாறாக அனைவரும் இப்பகுதியை கண்டு ரசிக்கவேண்டும் என்பதற்காகத்தான்’’ என்று விவரிக்கிறார்.


























