தமிழக அரசு திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைப் பெற்றுவருகிறது. ஏற்கனவே 12 மணிநேர வேலைநேர மசோதா எல்லா தரப்பினரிடமும் அதிருப்தியைப் பெற்றுவரும் நிலையில், திமுகவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுக்கவே, திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதி அளிக்கப்படாது என்றும், ஐபிஎல் போன்ற சர்வதேச ரசிகர்கள் கலந்துகொள்ளும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஆயினும் அரசுத்தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அரசாணையில் Marriage Hall என்ற சொல் இடம்பெற்றுள்ளதை வலைதளங்களில் பலரும் செந்தில் பாலாஜிக்கு சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு மாற்றாக அரசு வீடுவீடாகச் சென்று மதுபானம் டெலிவரி செய்யலாம் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ’’தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் மதுபானச் சட்டத் திருத்தம் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்பதாகக் கூறிவிட்டு, திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதன் மூலம் மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது. இதற்கு வீடுவீடாகச் சென்று மதுவை டோர் டெலிவரி செய்யலாம். இது ஏமாற்று விஷயம். ஒரு சமூகச் சீரழிவை ஏற்படுத்தும். மக்களைச் சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை அரசு செய்துவருகிறது. தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இதை அனுமதிக்க மாட்டோம். மதுக்கொள்கையில் இந்த அரசு நேரடியாகச் செய்ய முடியாததை மறைமுகமாகச் செய்கிறது’’ என்று தெரிவித்தார்.


























