கென்யா நாட்டில் இயேசுவைக் காணவேண்டும் என்று பட்டினி கிடந்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. மேலும் பலர் பட்டினியின் காரணமாக உயிரிழக்கும் நிலையிலும் உள்ளனர்.
கென்யா நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மலிந்தி நகரத்தின் ஷகாஹோலா காடுகளில் சந்தேகத்திற்கிடமளிக்கும்படியான கென்ய போலீசாரின் தேடுதலின் போது, அதிர்ச்சியளிக்கும் படியாக புதைக்கப்பட்ட 51 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்குள்ள ஒரு தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியாரின் ’’பட்டினி கிடந்தால் இயேசுவைச் சந்திக்கலாம்’’ என்ற போதனையை நம்பி மூடநம்பிக்கையின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக ஷகாஹோலாவில் அமைந்துள்ள Good News International Church-ன் தலைவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியில் இருந்து இந்த உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ’ஷகாஹோலா வனப் படுகொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கென்யாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் இதுவரை 112 பேர் அப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக கென்ய மீட்வுக் குழுவினரிடம் புகாரளித்துள்ளனர். முன்னதாக மகென்சி என்தெங்கே என்ற மதபோதகர், இரண்டு குழந்தைகள் தங்கள் பெற்றோர் முன்னிலையில் பட்டினி கிடந்து உயிரிழந்தது குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு பின் பிணையில் வெளிவந்துள்ளார்.
கென்யாவின் இந்தக் கோர சம்பவம் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றி கென்ய அரசு மத ரீதியிலாக இவ்வாறு மேற்கொள்ளப்படும் மூட நம்பிக்கைகள் குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கென்ய உள்துறை அமைச்சர் கித்துரே கிண்டிகி கூறுகையில், ’’அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு கடவுளை வணங்குவதற்கான மனித உரிமையை இந்த சம்பவம் முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை கிறிஸ்துவர்கள் வாழும் கிறிஸ்துவ நாடான கென்யாவில் இதுபோன்று மதவிஷயங்கள் சார்ந்து முந்தைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அரசு மற்றும் தேவாலயங்களுக்கு இடையே சில பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


























