பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் விளையாட்டு நிர்வாகக் கூட்டமைப்பின் தலைவரைக் கைது செய்யக் கோரி டெல்லியில் இந்திய மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் புகார்களை விசாரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததையடுத்து அவர்கள் ஜனவரி மாதம் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் பிற அதிகாரிகள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தடகள வீரர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இதை பிரிஜ் பூஷன் தடாலடியாக மறுத்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரியில் நடந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றன. அந்த நேரத்தில், WFI கூட்டமைப்பு, மல்யுத்த வீரர்கள் கூறிய பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. தொடர் எதிர்ப்புகள் காரணமாக அரசு பிரிஜ் பூஷன் சிங்கை சில வாரங்களுக்கு கூட்டமைப்பு சார்ந்த பணிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது; மற்றும் கூட்டமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைத்தது.
பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் தனது அறிக்கையை இந்த மாதம் சமர்ப்பித்தது. ஆயினும் விசாரணை குறித்த உண்மைகள் எதுவும் வெளியிடப்படாமலே உள்ளன.
இதைத்தொடர்ந்து தான் பிரிஜ் பூஷனைக் கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டங்களை நேற்று மீண்டும் தொடங்கினர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டில் ஏழு பெண் விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷன் மீது தனித்தனியாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இவ்வாறான அரசின் அதிகாரப் போக்கிற்கு எதிராக, கவனிக்கப்படும் விளையாட்டு வீர்ர்கள் ஒன்றுகூடுவது இதுவே முதல்முறையாகும். குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சிங் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


























