திருமண நிகழ்வுகளில் மதுபானங்களைப் பரிமாற அரசு அனுமதி வழங்கியுள்ள நிகழ்வு பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
தமிழக அரசு தினம் தினம் புதுப்புது சர்ச்சைக்குறிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு மக்களை பதற்றத்திலேயே வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, தொழிலாளர்களுக்கான 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரம் வரையான வேலைநேர மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட்து. இதற்கு காங்கிரஸ், விசிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தனது அறிவிப்பில், ’’திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். அது ஒரு நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும் சிறப்பு அனுமதியுடன் மது விருந்து பரிமாறலாம்.
F.L.12 சர்வதேச/தேசிய உச்சிமாநாடுகள் மற்றும் நிகழ்வுகள்/ மாநாடுகள்/ கொண்டாட்டங்கள்/ திருவிழாக்கள் போன்றவற்றில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்கும், சிறப்பு உரிமம் வழங்குகிறது.
F.L.12 சிறப்பு உரிமம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும், மதுவிலக்கு துணை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியுடன், உடைமைக்காக கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி உரிமக் கட்டணம் செலுத்தினால் வழங்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றுவருகிறது. ஏற்கனவே வீதிக்கு நான்காக இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளால் பாதிக்கப்பட்டோர் அவற்றை மூட வலியுறுத்திவரும் நிலையில், இவ்வாறான பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுபானப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அனுமதி வழங்குவது சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்புமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


























