சர்ஜூன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘புர்கா’ படம் குறித்த விவகாரம் தான் இணையம் முழுவதும் பற்றி எரிந்துவருகிறது. கலையரசன், மிர்னா மேனன், ஜி.எம்.குமார் உள்ளிட்டோர் நடிப்பில் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ’புர்கா’. இப்படத்தை மோகன் தயாரித்துள்ளார் மற்றும் இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் இஸ்லாம் மதத்தை தவறாகச் சித்தரிப்பதாக கண்டனங்கள் வலுத்துவருகின்றது. இதில் கணவனை இழந்து ’இத்தா’ என்ற சடங்கின் காரணமாக தனிமையில் இருக்கும் நஜ்மா என்ற பெண்ணின் வீட்டிற்குள் தஞ்சம் புகும் சூர்யா என்ற இளைஞர், அவரிடம் இஸ்லாத்தின் கட்டுப்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்வியெழுப்புகிறார். மேலும் விரும்பாமல் அவற்றைப் பின்பற்றும் நஜ்மாவிடம், அதில் மறைந்துள்ள பிற்போக்குத்தனங்கள் குறித்து விளக்குகிறார். இதனால் படத்தின் துவக்கம் முதல் அந்நிய ஆணான சூர்யாவிற்கு முகத்தை காட்டாமல் மறைத்துவந்த நஜ்மா, படத்தின் இறுதியில் முகத்தின் திரையை விலக்கி அவருக்கு தன்னுடைய முகத்தைக் காண்பிப்பது போல் படம் நிறைவுறுகிறது.
இதில் இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இயக்குநர் சர்ஜூன் தவறாகவும், எதிர்மறையாகவும் சித்தரிப்பதாக இஸ்லாமிய அமைப்புகளிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்தது. தொடர்ந்து சர்ஜூனுக்கும், படத்தின் தயாரிப்பாளர் மோகனுக்கும் மிரட்டல்விடும்படியாக பலரும் இணையத்தில் வீடியோ வெளியிட்டு பேசிவருகின்றனர். மேலும் இப்படத்தை ஒளிபரப்புவதை விட்டும் தடை செய்யவேண்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதற்காக ’புர்கா’ படத்திற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. கலை என்ற பெயரில் எந்த மதத்தின் நம்பிக்கைகளும், வழக்கங்களும் புண்படுத்தப்படக்கூடாது. ’புர்கா’ படத்தை உடனடியாக தடை செய்யவேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ’அயலி’ இணையத்தொடர் போன்று, பெண்களுக்கு எதிராக மதங்களின் பெயரில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை எதிர்த்துக் கேள்விகேட்டு வெளியாகியுள்ள இத்திரைப்படம் முற்போக்குவாதிகள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது. மேலும் துணிவான முயற்சிக்காக சர்ஜூனுக்கும் சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.


























