தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. அதாவது ஒரு தலைமுறையின் சினிமா கலைஞர் சினிமாவையே புரட்டிப்போடும் அளவிற்கு தனது திறமையால் உச்சத்திற்குச் சென்றால், அவரது பிள்ளைகள் ஆவரேஜ் லெவல் கலைஞராக கூட ஜொலிக்கமாட்டார்கள். ஒன்றிரண்டாய் அப்படி சில ஆளுமைகளின் வாரிசுகள் சினிமாவில் ஜொலித்துவிட்டாலும், பெரும்பாலான கலைஞர்களின் வாரிகள் சினிமாவில் சோபிக்கவேயில்லை.
இதற்கு உதாரணமாக எத்தனையோ பேரை சொல்லலாம். தமிழ் சினிமாவை தன் படைப்பாற்றலால் செதுக்கி, அதற்கு உயிர்கொடுத்த இயக்குநர் இமயம் பாராதிராஜாவின் மகன் மனோஜ், திறமையான நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ், நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், பல வெற்றிப்படங்களில் நடித்த பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என்று தன்னை இன்னும் நிலை நிறுத்திக்கொள்ளப் போராடும் கலைஞர்களின் பட்டியல் இங்கு நீண்டுகொண்டே செல்லும். அதில் ஒருவர் தான் திரைக்கதை ஜாம்பவான் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு.
பாக்யராஜ் இயக்கிய ’வேட்டிய மடிச்சு கட்டு’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், ஹீரோவாக இவர் அறிமுகமான திரைப்படம் ’சக்கரகட்டி’. ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் சொல்லவே வேண்டாம் எனும் அளவிற்கு இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அளவுக்கு இப்படத்தின் கதை இடம்பெறவில்லை. ஆக முதல் படமே சாந்தனுவுக்கு தோல்விப்படமாக அமைந்தது. தொடர்ந்து இவர் ’சித்து +2’, ’கண்டேன்’, ’வாய்மை’, ’அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துவிட்டாலும் பேர் சொல்லும் அளவுக்கான எந்த வெற்றிப்படமும் இவருக்கு இன்னும் அமையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்திலும் இவரது கதாபாத்திரம் வெறும் சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோவதாக அமைந்தது.
இந்நிலையில், தான் இன்னமும் குறிப்பிடும்படியான ஒரு நடிகராக சினிமாவில் வளராமல் போனதற்கு தனது தந்தை பாக்யராஜ் தான் காரணம் என்று சாந்தனு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெளிவுபடுத்துகையில், ”சக்கரகட்டி படத்தின் வாய்ப்பு வந்த சமயம் அப்பா அதில் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார். ஆனால், இந்த வாய்ப்பை விடக்கூடாது என்பதால் அப்பா சொன்ன மாற்றங்களைச் செய்யச்சொல்லாமல் நானே விரும்பி அப்படத்தில் நடித்தேன். பெரிதும் எதிர்பார்க்கப்படாலும் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பிறகு, எனக்கு கதை கேட்கத் தெரியவில்லை என்று அப்பாவே அதன் பின் வந்த படங்களுக்கு கதை கேட்கத் துவங்கினார். அப்படி எனக்கு வந்த வாய்ப்பு தான் ’சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரம். ஆனால், ’சுப்ரமணியபுரம்’ படத்தின் கதை அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று வேறு படங்களில் கவனம் செலுத்தச் சொன்னார். ஆனால், அப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
இதனால் அப்பா மிகுந்த கவலையடைந்தார். ஒருகட்டத்திற்கு மேல் என் வெற்றிக்கு அவர் குறுக்க நிற்கவில்லை என்று கூறிவிட்டு என்னையே அதற்குப்பிறகு வந்த படங்களின் கதையைக் கேட்டு தேர்வுசெய்துகொள்ளச் சென்னார். ஒருவேளை சுப்பிரமணியபுரம் படத்தில் நான் நடித்திருந்தால் இன்று பெரிய நடிகராக வந்திருக்க வாய்ப்புண்டு. அதை தவறவிட்ட காரணத்தால் இன்றளவும் வளர்ந்துவரும் நடிகராகவே இருந்துவருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


























