நம் ஊரில் நமது மக்களின் எமோஷனுடன் கலந்துபோன ஒரு விஷயம், மைக்செட். திருவிழாக்கள் என்றாலோ, சுப காரியங்கள் என்றாலோ, கட்சிக் கூட்டங்கள் என்றாலோ மைக் செட் இல்லாத நிகழ்வுகளைக் கற்பனை செய்யவே முடியாது. எத்தனையோ பேச்சுகளும், பாடல்களும், ஆடல்களும், விளம்பர அறிவிப்புகளும் இதில் ஒலிபரப்பாகி நம்மை நாஸ்டால்ஜிக் காலத்திற்கே கூட்டிச்செல்லும்.
இப்படி எத்தனையோ தேவைகளுக்குப் பயன்பட்டுள்ள மைக் செட்டை, ’ஆனா இது புதுசா இருக்குன்னே!’ என்று சொல்லவைக்கும் அளவுக்கு தன்னை வசை பாடியவர்களை திட்டப் பயன்படுத்தியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜான் ரவி என்ற நபர் தேநீர் அருந்துவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்றுள்ளார். அச்சமயம் அங்கு கூடியிருந்த சிலர் ஜான் ரவி குறித்து கெட்டக் கெட்ட வார்த்தையில், காதெல்லாம் கருகும் அளவிற்குத் திட்டிப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தொடர்ந்து ஜான் ரவியை வசைபாடியது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இதற்குப் பழிதீர்த்தே ஆகவேண்டும் என்று காத்திருந்த ஜான் ரவி, ஒரு நாள் தனது இருசக்கர வாகனத்தில் மைக் செட் ஒன்றைப் பொருத்தி, தான் அவமானப்படுத்தப்பட்ட அந்த டீ கடைக்கு முன்பாக நின்று, மைக்கில் தன்னை திட்டியவர்களை எல்லோரும் கேட்கும்படி கோவம் தீரத் திட்டித்தீர்த்துள்ளார்.
இப்படி ஒரு வேடிக்கையான பழிவாங்கல் சம்பவம் அங்கு நிகழ்ந்த நிலையில், இதனால் கடுப்பான டீக்கடை உரிமையாளர், ஜான் ரவி மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதையடுத்து பொது இடத்தில் தகாத வார்த்தைகளில் திட்டிய குற்றத்திற்காக ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜான் ரவியின் இந்த செய்கை இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.


























