பூமியைச் சுற்றியுள்ள விண்வெளிப் பகுதியில் செயற்கைக் கோள் போன்றவற்றினால் உருவான சுமார் 20,000க்கும் மேற்பட்ட குப்பைகள் சுற்றிவருவதாக நாசா தெரிவித்துள்ளது.
உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துவருகிறது. வளர்ச்சியை நோக்கி நகரும் நாடுகளிடையே புதுப்புது தொழில் நுட்பக்கண்டுபிடிப்புகளின் தேவை உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனால் அவற்றின் பொருட்டு செயற்கைக்கொள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவது அவசியமாகிப போகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சி, செல்போன், இன்ன பிற இதர இணையவழிப் பயன்பாட்டு கருவிகள் அத்தனையும் இயங்க இந்த செயற்கைக்கொள்களின் செயல்பாடு அவசியமாகிப் போகிறது. விண்வெளியில் நிகழும் ஏதேனும் ஒரு சிறிய அசம்பாவிதத்தால் இந்த செயற்கைக்கொள்களின் சிக்னல் கிடைக்காமல் போனால் கூட உலகின் தொழில் நுட்பப் பயன்பாடுகளின் செயல்பாடு முற்றிலும் நின்று அத்தனையும் முடங்கிவிடும்.
நிதர்சனம் இப்படி இருக்க, நாம் பூமியிலிருந்து அனுப்பும் செயற்கைக்கோள்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட கருவிகளின் குப்பைகள் நம்மை மலைக்கவைக்கும் அளவிற்குப் பெருகி விண்வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதாக நாசாவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சுமார் 20,000 குப்பைகள் விண்வெளியைச் சுற்றிக்கொண்டிருக்கின்றனவாம்.
இதைத்தொடர்ந்து பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் விண்வெளி குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கின்றனர். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்படும் செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள், செயலிழந்த விண்கலன்கள், விண்வெளி வீர்ர்களால் வெளியேற்றப்படும் பொருட்கள் போன்றவற்றால் விண்வெளியில் குப்பை அதிகரித்துவருகிறது.
தற்சமயம் வரை 9,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருவதாகவும், 2030ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 60,000 ஆக அதிகரிக்கலாம் என்றும் இதன் காரணமாக குப்பைகளின் அளவு 100 டிரில்லியனை எட்டலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவ்வாறு விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகள் ஒன்றோடொன்று மோதுவதால் விபத்துகள் ஏற்படலாம் என்றும், பூமிக்கு அருகில் வருவதன் மூலம் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் குப்பைகளாக அங்கு சுற்றாத வண்ணம் தன்னை அழித்துக்கொள்ளும் புதிய உத்திகளுடன் வடிவமைக்கப்படவேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலாக உள்ளது.


























