தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு முக்கியமான அறிவிப்பை தற்சமயம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்தனை நாட்களாக வெளியிடப்படும் என்று வாய் வார்த்தையாக சொல்லிவந்த திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவதாகக் கூறி அதிரவைத்துள்ளார். மேலும் இந்த ஆப்பரேஷனுக்கு ’DMK Files’ என்று டைட்டில் எல்லாம் வைத்திருக்கிறார்.
மேலும் இதுகுறித்த அறிவிப்பில் கலைஞர் கருணாநிதி தொடங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் புகைப்படங்கள் இடம்பெறும் சிறிய டீசரையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் அணிந்துள்ள ரபேல் வாட்ச் குறித்த பேச்சு பூதாகரமானது. வெறும் 4 ஆடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை, உலகில் வெறும் 500 என்ற எண்ணிக்கையில் மட்டுமேயுள்ள, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் வாட்ச்-ஐ எப்படி வாங்க முடியும் என்றும், அதற்கான ரசீதை அவர் வெளியிடவேண்டும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் கேள்வியெழுப்பினார்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை, தான் கையில் கட்டியிருப்பது ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து தயாரிக்கப்பட்டது என்றும், ரபேல் விமானம் ஓட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் இதையாவது கட்டலாம் என்று அணிந்துள்ளதாகவும் தெரிவித்தார். இப்படியாக இருவருக்கும் ட்விட்டரில் சில நாட்கள் வார்த்தைப்போர் மூண்டது.
ஒருகட்டத்தில், அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கிய பில்லை ஒருமணி நேரத்தில் வெளியிடவேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கெடுவிதிக்க, தனது 10 வருட சொத்து விபரங்களை வெளியிடத் தயார் என்றும், அதுபோல திமுக அமைச்சர்கள், தலைவர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடத் தயாரா என்றும் கேள்வியெழுபினார். மேலும் 2023, ஏப்ரல் மாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், ரபேல் வாட்சின் ரசீதையும் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்சமயம் வெறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மட்டுமே வெளியிடுவது குறித்து அண்ணாமலை அறிவித்துள்ளதாகவும், ’வெளியிடுவேன் என்று கூறிய ரபேல் வாட்ச் பில் எங்கே சார்?’ என்றும் இணையவாசிகள் கேள்வியெழுப்பிவருகின்றனர். இத்தனை நாட்களாக, ’’வர்ற பொங்கலுக்கு ஊழல் பட்டியல் ரிலீசு’’ என்ற பாணியில் இழுத்துக்கொண்டுவந்த செந்தில் பாலாஜி vs அண்ணாமலை பிரச்சினை நாளை இறுதிக்கட்டதை எட்டும் என நம்பலாம். அல்லது வேறு ஏதேனும் ஒரு புதிய பிரச்சினையின் துவக்கமாகவும் நாளைய தினம் இருக்கலாம்.


























