கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அதற்கு காரணமாக கடந்த ஆண்டில் கிளப்பப்பட்ட ஹிஜாப் பிரச்சினை முக்கியமான ஒன்றாக அமையும். அந்த அளவிற்கு அப்பிரச்சினை இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்லாமியப் பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், இப்பிரச்சினை பூதாகரமாக பெரிதும் காரணமாக இருந்த கர்நாடகாவின் உடுப்பி தொகுதி எம்.எல்.ஏ ரகுபதி பட்டிற்கு பாஜகவால் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ள ரகுபதிக்கு இந்த நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து பேசுகையில் அவர் கன்ணீர் விட்டு அழுதுள்ளார்.
உடுப்பியில் உள்ள அவரது இல்லத்தில் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சியின் முடிவு குறித்து நான் வருத்தப்படவில்லை, ஆனால் கட்சி என்னை நடத்திய விதம் எனக்கு வேதனை அளிக்கிறது. அமித்ஷா ஜெகதீஷ் ஷெட்டரை அழைத்து மாற்றங்கள் குறித்து தெரிவித்திருந்தார். ஷா என்னை அழைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் குறைந்த பட்சம் மாவட்டத் தலைவர் அதை எனக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கட்சியின் மாவட்டத் தலைவர் கூட கட்சியின் முடிவைத் தெரிவிக்க அழைக்கவில்லை. தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தான் அதை அறிந்தேன். சாதியை காரணம் காட்டி எனக்கு டிக்கெட் மறுக்கப்பட்டிருந்தால், அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்’’ என்றார்.
கட்சி எல்லா இடங்களிலும் வளர்ந்திருப்பதால் “அயராது உழைக்கும்” தன்னைப் போன்றவர்கள் பாஜகவுக்குத் தேவையில்லை என்று கூறிய ரகுபதி, கடினமான காலங்களிலும் கட்சிக்காக உழைத்ததாகவும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பாஜக தன்னை நடத்தும் விதம் குறித்து பேசிய அவர், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாமல் மிகவும் அதிர்ச்சியிலுள்ளதாக தெரிவித்துள்ளார். ரகுபதியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது அடுத்த திட்டங்களைப் பற்றி அறிய அவரது இல்லத்திற்கு அருகில் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


























