கொரோனா காரணமான ஊரடங்கால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை போக்க மனமகிழ்ச்சி மற்றும் புத்தாக்க செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களை தொடக்க கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்…
“தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 1 – 8ம் வகுப்புகளுக்கு வரும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர், மாணவ நேரடி வகுப்பறை கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழாத காரணத்தால் மாணவர்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல், புத்தாக்கப் பயிற்சிக் கூட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களுக்குப் பின் அடுத்த 40 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கிட வேண்டும். மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனை எட்டும் வரை புத்தாக்கப்பயிற்சி தொடரப்பட வேண்டும். மாணவர்களுடைய கற்றல் அடைவு காலஅளவை நீட்டிப்பதை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
அதன்பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துமாறும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























