தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஷோபனா கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த கடிதம் வாயிலாக தெரியப்படுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் இக்கடிதத்தை பரிசீலித்து மாணவி ஷோபனா மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்தார். தனக்கு உதவிய முதல்வரை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பண வசதி இல்லை என கடிதம் வாயிலாக தனது நன்றியை தெரிவித்தார்.
மதுரை வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி ஷோபனாவை சந்திக்க விரும்பினார். அதற்காக ஷோபனாவையும் அவரது பெற்றோரையும் சந்திப்பதற்காக அரசு காரை திருவேங்கடம் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர். மாணவி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார். முதல்வரை நேரில் சந்தித்த மாணவி தனது நன்றியை தெரிவித்தார்.

மாணவி ஷோபனாவுக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் நன்றாக படிக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் மாணவி ஷோபனாவுக்கு தேவையான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார்.
























