4 மாவட்டங்களில், தென்மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 18 சென்டி மீட்டர், பரங்கிப்பேட்டை மற்றும் தூத்துக்குடியில் தலா 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இரு தினங்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
























