கல்வி நிலையங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த செப். 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்து வந்தார்.
தற்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நவம்பர் 1-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கும் நிலையில், பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்கிறேன். நவம்பர் 1-ம் தேதி மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம். நம்பிக்கையுடன் கல்விச்சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்துக்கொள்ளுங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மாணவர்களை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்க வேண்டும். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்புக்கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























