மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவு இல்லத்துக்கும் சென்று மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட தமிழக பாஜக சார்பில் பரிந்துரை செய்யப்படும். இப்பரிந்துரையை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிசீலிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
























