நேற்று காலை, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 46 வயதாகும் அவர், நேற்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
கர்நாடக அரசு, புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் இறப்பிற்கும் பின்னும் அடுத்தவரின் வாழ்வில் ஒளி கொடுத்துள்ளார். அவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். பெங்களூரூவில் உள்ள நாராயணநேத்ராலயா கண் வங்கியில் அவரது கண்கள் சேமிக்கப்பட்டது.
தொலைக்காட்சி ஒன்றுக்கு, நாராயண நேத்ராலயா மருத்துவமனை தலைவர் புஜங் ஷெட்டி பேட்டியளித்தபோது,
“ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்வதாக உறுதியளிக்கும் போது, அவரது குடும்பத்தினர் அனைவரும் இறந்த பிறகு தங்கள் கண்களை தானம் செய்வார்கள் என்று கூறினார். குடும்பம் அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றியது. இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் இன்று நண்பகல் என்னை அழைத்து கண்களை தானமாக எடுக்க சொன்னார்கள்.
எனது குழு புனித் ராஜ்குமாரிடமிருந்து ஒரு ஜோடி ஆரோக்கியமான கண்களை மீட்டெடுத்துள்ளது. எங்களிடம் எங்கள் மருத்துவமனையில் காத்திருக்கும் பெறுநர்களின் நீண்ட பட்டியல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, கண் தானத்திற்கு இரத்தக் குழுக்கள் பொருந்த வேண்டியதில்லை. எனவே இந்த கண்களை நாம் விரைவில் பயன்படுத்தலாம். நாளை அல்லது மறுநாள் இந்த கண்களை வேறு இரண்டு நோயாளிகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மீண்டும் உலகைப் பார்க்கிறார்கள்” என்று டாக்டர் ஷெட்டி கூறினார்.
























