கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரும், கன்னட மக்களால் செல்லமாக ‘அப்பு’ என்று அழைக்கப்படுபவருமான புனித் ராஜ்குமார், தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமார் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தன் உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
’பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.’

இவ்வாறு அவர் தன் இரங்கலைப் பகிர்ந்துள்ளார்.
























