பெங்களூருவில் வசித்து வந்த கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (46), இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த புனித் ராஜ்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கவலைக்கிடமான நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி, புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“திறமையான நடிகர் புனித் ராஜ்குமாரை கொடூரமான திருப்பம் கொண்ட விதி நம்மிடமிருந்து பறித்துவிட்டது. மரணமடையக்கூடிய வயது இதுவல்ல. வரும் தலைமுறையினர் புனித் ராஜ்குமாரை அவரின் படைப்புகள் மற்றும் சிறப்பான ஆளுமைகளால் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி!” என தெரிவித்துள்ளார்.
























