7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி அண்மையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் முடிவடைந்தது. 12 கோடியே 21 லட்சம் ரூபாய், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பார்வையிடவும் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கீழடி சென்று ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், கீழடியில் நடக்கும் 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்டு அதன் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடங்களையும் பார்வையிட்ட அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அகழ் வைப்பகம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். அதே பகுதியில் அகழாய்வு நடக்கும் மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளுக்கும் சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வை முடித்துக் கொண்ட பின் அங்கிருந்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
























