பழங்குடியின பெண் ஒருவர் தங்களது சாதியின் காரணமாக கோவில் அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க மறுக்கிறார்கள் என யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததை அடுத்து அப்பெண்ணை அழைத்து வந்து அப்பெண்ணுடன் அமர்ந்து உணவருதினார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
பழங்குடியின் பெண் ஒருவர் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். பாசி மணிகள் விற்கும் தொழில் புரிகிற அவர், பசியாறுவதற்காக கோவில் அன்னதானத்துக்குச் சென்று சாப்பிட அமர்ந்த போது தன்னை அடித்து விரட்டியதாகவும், அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்ற பிறகு சாப்பிடச் சொன்னதாகவும் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார். சாதிய ரீதியாக புறக்கணிக்கப்பட்ட அப்பெண்ணின் வலி நிறைந்த அப்பேட்டியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்திருந்தனர். இன்றைக்கும் சாதிய ரீதியான தீண்டாமை நிலவி வருவதற்கான உதாரணமாக அந்த வீடியோவை பலரும் பகிர்ந்தனர்.

இந்நிலையில், அப்பெண் தனக்கு உணவு வழங்க மறுத்ததாக குறிப்பிட்ட மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோவில் அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது என்று தெரிவித்த அவர் பொதுமக்களுடன் இணைந்து உணவருந்தினார். தனக்கு உணவு வழங்க மறுத்ததாக பேட்டி கொடுத்த பாசிமணிகள் விற்கும் அப்பெண்ணும் அமைச்சருக்கு அருகில் அமர்ந்து உணவருந்தினார்.
அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. அனைவரும் சமம் என்கிற சமத்துவத்துக்கு உதாரணம் இதுதான் என அப்புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
























