துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.41 கோடி ரூபாய் மதிப்பிலான 3.22 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தை விளைவிக்கும் விதமாக இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் வைத்து மறைத்து 3.22 கிலோ கிராம் தங்கம் கொண்டு வரப்பட்டதை கண்டறிந்தனர். இருவேறு நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையைத் தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 41 லட்சம் மதிப்புடையது என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த சுங்கத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
























