கன்னட சினிமாவின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் தென்னிந்திய திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் புனித்தின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையிலும் இழப்பு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார்.
புனித் ராஜ்குமார் இறப்புக்கு ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் “மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்குஇழப்பு ஆகும்.

பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.தலைவர் கலைஞரின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாதஇழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
























