டி20 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இஷான் கிஷனை களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இந்தியாவின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. அப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. அறுவை சிகிச்சை காரணமாக உடற்தகுதி குறைந்து இருந்ததால் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அப்போட்டியில் பந்து வீசவில்லை. மேலும், அவரால் ஃபீல்டிங்கும் செய்ய முடியவில்லை என்பதால் அவரை அணியில் சேர்த்தமைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்கக்கூடாது என்கிற கருத்துகளும் எழுந்து வந்தன. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வலைப்பயிற்சியில் பந்து வீசினார். இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று குறித்த கருத்தை கூறியிருக்கிறார். “நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கும் இஷான் கிஷனை களமிறக்கலாம். அவர் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் பாண்டியாவுக்கு மாற்றாக நான் அவரையே தேர்ந்தெடுப்பேன். அதேபோல புவனேஷ்வர்குமாருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
























