இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் நடித்துள்ள மகான் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை நாயகனாக வைத்து இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் இந்த ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இப்படத்துக்குப் பிறகு நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் ஆகிய இருவரை வைத்து மகான் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது.

இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆதித்ய வர்மா மூலம் அறிமுகமான துருவ் விக்ரம் அடுத்ததாக இப்படத்தில் நடித்திருக்கிறார். மகான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருந்தது. இந்நிலையில் ‘மகான்’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியானதும் ட்விட்டர் தமிழ்நாடு ட்ரெண்டிங்கில் மகான் பற்றிய ட்வீட்டுகளே அதிகம் இடம்பெற்றிருந்தன. ரசிகர்கள் பலரும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
























