உத்தரகண்ட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 18, 19, 20 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பெருவெள்ளத்தால் நைனிடால் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழையின் காரணமான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் தண்ணீர் புகுந்து வசிப்பிடம் இன்றித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் இதுவரை 224 வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப்பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படை மற்றும் உத்தரகண்ட் மாநில காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது . இந்த வெள்ளத்தின் விளைவுகளால் 24 பேர் காயமடைந்துள்ளனர். முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
























