நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஏற்பட்ட மயக்கம் காரணமாக நேற்றிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று வருவார் என அம்மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
மயக்கம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்ததில் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதன் பிறகு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரஜினி தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பிரச்னை கண்டறியப்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரிகிறது. முழுமையான சிகிச்சைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து கேட்டபோது வழக்கமான உடல் பரிசோதனைக்குதான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
























