சூர்யா நடிப்பில், சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய்பீம். சூர்யா, ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வழக்கமான படங்களைப் போல ஹீரோவாக அல்லாமல் கதையின் முக்கிய நாயகனாக சூர்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி வெளியானது.
’ஜெய் பீம்’ படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் காவல்துறை அதிகாரிகளால் பாதிக்கப்படும் மலைவாழ் பழங்குடியின மக்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
மலைவாழ் மக்கள் மீது சாமானிய மக்களின் பொதுபுத்தி, சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி இந்த திரைப்படம் நேரடியாக ’அமேசான் பிரைம்’ வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம் திரைப்படம் குறித்து பேசிய சூர்யா, ‘ஜெய்பீம் என்ற டைட்டில் முடிவு செய்ததவுடன் அந்த டைட்டில் யாரிடம் இருக்கிறது என்று விசாரித்த போது அது ரஞ்சித்திடம் இருந்தது. அதனையடுத்து, நாங்கள் இந்த டைட்டிலைத் தர முடியுமா என்று ரஞ்சித்திடம் கேட்டோம். அவர், எந்த தயக்கமுமின்றி உடனே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த டைட்டில் எல்லாருக்கும் பொதுவானதுதான் என்று மனமுவந்து கொடுத்தார். அவருக்கு நன்றிகள்!” என்று சூர்யா தெரிவித்தார்.
























