நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பின்னர் அவர் சென்னைக்கு திரும்பிய நிலையில், நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை பார்த்ததாக ஹூட் செயலியில் பதிவிட்டிருந்தார். நேற்று மாலை திடீரென ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன்,

”ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். அவர் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது, நிச்சயம் ’அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது. தீபாவளிக்கு படம் வெளியாகும் போதும் ரஜினியும் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருப்பார். உறவினர் என்ற முறையில் பார்க்கவந்துள்ளேன்” என்றார்.
”ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்” ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
























