வட கொரியாவில் ஏற்பட்டுள்ள உணவுப்பஞ்சம் காரணமாக 2025ம் ஆண்டு வரை குறைவாக சாப்பிட அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.
வடகொரியாவில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்ததாலும், விவசாயத்துறை போதிய உற்பத்தியை நிறைவேற்றத் தவறியதாலும் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டின் அனைத்து எல்லைகளையும் வடகொரியா மூடியுள்ளது. இதன் விளைவாக வடகொரிய மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த உணவுப்பஞ்சம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் “உணவுப் பஞ்சம் நிலவுவதால் குறைவாக சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 2025ம் ஆண்டு வரை உணவுப் பஞ்சம் நீடிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான வர்த்தகமும் 2025ம் ஆண்டு வரையிலும் தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. கிம் ஜாங் உன்னின் இக்கருத்து பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகள் பலவும் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
























