2003ம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்துக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா படம் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து 2001ம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படம் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுவரை தன் மீதிருந்த நடிக்கவே தெரியவில்லை என்கிற விமர்சனத்துக்கெல்லாம் அப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா. அந்த நடிப்பைப் பார்த்துதான் சூர்யாவுக்கு காக்க காக்க படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு விக்ரம் – சூர்யா கூட்டணியில் பிதாமகன் வெளியானது. அப்படத்திலும் சூர்யா தன் சிறப்பான நடிப்பை வெளிக்கொணர்ந்திருப்பார்.
தன் திரை வாழ்க்கையில் முக்கியமான இயக்குனரான பாலாவுடன் மீண்டும் இணைந்து படம் நடிக்கவிருப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமாருடன் சூர்யா, பாலா இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
விக்ரமின் மகன் துருவ் – ஐ வைத்து அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான ‘வர்மா’ திரைப்படத்துக்குப் பிறகு பாலா இயக்கவிருக்கும் படம் இதுதான்.
























