திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம், கரடிபட்டியை சேர்ந்த, அரசு பள்ளியில் பயின்று ஐஐடிநுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் இவர். இந்த ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-ஐதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் அருண்குமாரை முதல்-அமைச்சர் அவர்கள் இன்று (28-10-2021) நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதல்-அமைச்சர், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று உறுதியளித்தார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























