அறுவை சிகிச்சை காரணமாக பந்து வீசாமல் இருந்த இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது வலைப்பயிற்சியில் பந்து வீசத் தொடங்கியிருக்கிறார்.
2019ம் ஆண்டு அக்டோபரில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் பாண்டியா. அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச போட்டிகளில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இரு ஓவர்களை வீசினார். இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடிய 3 ஒருநாள், ஒரு டி20 ஆட்டங்களில் மொத்தமாகவே 16 ஓவர்களை மட்டுமே வீசினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசாததன் காரணமாக விமர்சனங்களுக்கு ஆளானார். ஆல்ரவுண்டரான பாண்டியா பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் விளையாடுவதற்குப் பலரும் எதிர்கருத்தை முன் வைத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் இன்னிங்ஸின்போது அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. இதனால் பாண்டியாவின் உடற்தகுதி குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வலைபயிற்சியில் ஹர்திக் பாண்டியா 20 நிமிடங்கள் பந்துவீசியுள்ளார். வலைப்பயிற்சியில் புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்துள்ளார். இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்து வீச வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.
























