தி ஃபேமிலி மேன் இணையத்தொடர் மூலம் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
2019ம் ஆண்டின் திரைத்துறைக்கான தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் விழா கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதும், சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த படம் அசுரன் என்பதால் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தமிழின் சிறந்த இயக்குநர் வெற்றிமாறன், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஷில்பா எனும் திருநங்கை கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

விஜய் சேதுபதிக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மனோஜ் பாஜ்பாயி தனது ட்விட்டர் பக்கத்தில்,“எனது அன்பான மற்றும் மிகவும் திறமையான நண்பர் விஜய் சேதுபதியை தேசிய விருது விழாவில் சந்தித்தேன். சூப்பர் டீலக்ஸில் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றதற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
























