சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக திமுகவினர் அறிவித்திருந்தும் இன்னும் வழங்கவில்லை இது போன்ற அவர்களது பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து சொல்லவேண்டும். முதியோர் உதவித் தொகை, திருமண உதவி திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை நாம் கொண்டு வந்தோம். இந்த திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறி, வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வெங்கடாஜலம், சக்திவேல், எம்.கே செல்வராஜ் மற்றும் புறநகர், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
























