இந்திய அரசின் சார்பில் திரைத்துறைக்கென வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்.
இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் 2019ம் ஆண்டுக்கான விருது ரஜினிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்திய சினிமாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்தை இயக்கியவர் ‘தாதா சாகேப் பால்கே’. ஆகவேதான் அவர் இந்திய திரையுலகின் தந்தையாகக் கருதப்படுகிறார். அவரது பெயரில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு கடந்த 25ம் தேதி நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் விருதளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் விருதைப் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தனது மனைவி லதாவுடன் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.
























