கடந்த மார்ச் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையானார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்றத் தேர்தல் சூழலில் சசிகலாவின் வருகை முக்கியமானதாக கருதப்பட்டதால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என அறிவித்த சசிகலா பின்னர் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
திமுக, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்தது. சசிகலா தேர்தலுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டினார். ஆட்சியையும், கட்சியையும் மீட்க வேண்டிய சூழல் இருப்பதாக தொண்டர்களிடம் பேசினார். இதன் எதிரொலியாக சசிகலாவுடன் தொடர்பில் இருந்த நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது.
அதிமுக பொன்விழா ஆண்டன்று, தி. நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி, கழக பொதுச்செயலாளர் என கல்வெட்டு வைக்கப்பட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்திக்க சசிகலா இன்று புறப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து புறப்பட்டு ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை தஞ்சாவூரில் நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்கிறார். 28 ஆம் தேதி மதுரை செல்லும் சசிகலா அங்கு முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி, அதன் பின் ஆதரவாளர்களை சந்திக்கிறார்,
கோரிப்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள சசிகலா, 29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30 ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்ற பின் அதரவாளர்களுடன் சந்தித்து பேசும் சசிகலா அன்றைய தினமே தஞ்சாவூர் திரும்புகிறார்.1 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா ஆதரவாளர்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து, திருநெல்வேலி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் அரசியல் ரீதியான சுற்றுப்பயணத்தையும், தொண்டர்கள் சந்திப்பையும் சசிகலா திட்டமிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
























