கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய திரையரங்குகள் திறப்பில், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கோலிவுட் சினிமாவுக்கு திருப்திகரமான வசூலை அள்ளித் தந்திருக்கிறது. வெளிநாடுகள் உட்பட வெளியான இடங்களில் எல்லாம் டாக்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் கொடுத்து தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. 3-வது வாரமாக திரையரங்கில் டாக்டர் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீடு முடிவாகி இருக்கிறது.

பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, மார்ச் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய டாக்டர் திரைப்படம் தள்ளிப்போனது. பின்னர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவானதும், ’டாக்டர்’ திரைப்படம் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் ஆனது. சன் குழுமம், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது.

உலகத் தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ற அறிவிப்புடன் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக நவ.4, மாலை சன் டிவியில் டாக்டர் வெளியாகிறது. அடுத்த நாளே(நவ.5) சன் நெக்ஸ்ட் தளத்திலும் ’டாக்டர்’ திரைப்படம் வெளியிடப்படும். ’சர்க்கார்’ போன்று சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் படங்கள் ஒருசேர நெட்ஃபிளிக்ஸில் வெளியாவதன் அடிப்படையில், டாக்டரை நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் நவ.5 அன்று எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.
























