பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைத் தொடர் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றும் ஹர்திக் பாண்டியா பந்து வீசாத நிலையில் எப்போது பந்து வீசுவது என்பது மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் பேட்டிங் மட்டும் செய்தார். அப்படியிருந்தும் தோள்பட்டை வலியால் அவர் அவதிப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. காயத்திலுருந்து முழுமையாக வெளியே வராத ஹர்திக் பாண்டியாவை எப்படி அணிக்குள் எடுக்கலாம் என்கிற விமர்சனங்களும் அதன் பிறகு எழுந்துள்ளன.
நேற்றைய போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தத் தோல்விக்கு சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானது 6வது பவுலர் இல்லாததும் ஒன்று. ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் என்றாலும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்த அவர் அதன் தாக்கத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில் விளையாட முடியாமல் தடுமாறினார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா எப்போது குணமடைந்து பந்து வீசுவார்? என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா “உடல் நலம் தேறி வருகிறேன். தற்போது எனது முதுகு வலி குணமடைந்துள்ளது. இப்போதைக்கு பந்து வீச மாட்டேன். அரையிறுதிக்கு முன்பு பந்துவீச விருப்பப்படுகிறேன். ஆனால், நான் எப்போது பந்துவீசலாம் என்பதை மருத்துவக் குழுவினரிடம் கலந்தாலோசித்த பிறகே வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
























