இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் நீடித்து வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று எல்லை நில பாதுகாப்புச் சட்டம் சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி பிராந்திய இறையாண்மை மற்றும் எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லைகளில் ஆக்ரமிப்பு, படையெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சீன ராணுவம் உறுதியுடன் எதிர்க்கும் என்றும் எல்லைப் பகுதிகளில் தேவைப்படும்போது போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லையோர கிராமங்களில் ஏற்கனவே சீனா தனது கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை வலுவூட்டும் விதமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து தாக்குதலில் ஈடுபடுவோரை சுடுவதற்கு இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது. லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் நடைபெற்ற நிலையில் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு மேலாக அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
























