டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்காக முகமது ஷமி மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் நடந்து வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக முன்னாள் கிரிகெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இத்தோல்வி இந்திய ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருக்கிறது. இந்த முறையும் இந்தியாவே வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு ஆட்டத்தைக் கண்டனர். ஆனால், சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

துபாய் சா்வதேச மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது. ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இந்தியா திணறி தோல்வி கண்டது.
இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன. நேற்றைய ஆட்டத்தில் 3.5 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்தார் ஷமி. இந்தியப் பந்துவீச்சாளர்களில் அதிக ரன்களை கொடுத்தவர் ஷமிதான்.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஷமியை துரோகியாகச் சித்தரித்து பதிவுகள் எழுதி வருகின்றனர். குறிப்பாக ஷமி ஓர் இசுலாமியர் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு ரன்களை வாரி வழங்கி விட்டார் என்பது போன்ற பொருளில் பல பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிரிகெட் வீரர்கள் பலரும் ஷமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஷமி மீதான இணையதள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. நாம் அவர் பக்கம் நிற்க வேண்டும். வெற்றி தோல்வியை வைத்து ஒரு வீரரை இழிவுபடுத்துவது தவறு. அவர் ஓர் சிறந்த விளையாட்டு வீரர்” என்று தெரிவித்திருக்கிறார்.
























