கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்படவிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் அம்மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மேற்குவங்கத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்வி நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கான அறிவிப்பை மம்தா இன்று வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் “9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பள்ளிகள் இயங்கும். பஞ்சாப் அரசை போலவே நாங்களும் எல்லைப் பாதுகாப்பு படையின் எல்லை விரிவாக்கத்துக்கு எதிராக போராடி வருகிறோம். எங்கள் எல்லைப் பகுதி முழுவதும் அமைதியான சூழல் நிலவி வருகின்றன. சட்டம் – ஒழுங்கு என்பது காவல்துறையின் பணி. மாநில அரசின் சட்டங்களின் அடிப்படையிலேயே மாநில அரசுகள் செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.
























